சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, ஊராட்சிகளை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரிகளை நியமித்துத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் உடனடியாக ஊராட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பாஸ்கரன் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஊராட்சிகளின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்றும் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அடுத்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அரசின் சட்டபூர்வ கடமை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாகக் காரணங்களைக் கூறி அரசியலமைப்பு வழங்கியுள்ள உத்தரவாதத்தை அரசு மீற முடியாது என்றும் சட்டத்திருத்தம் செய்ய இருப்பதாகக் கூறி அதற்கு முன்பே சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்றும் மனுவில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு தொடர்பான பணிகள் நிலுவையில் இருப்பதைச் சாக்கிட்டு ஒட்டுமொத்தத் தேர்தலையும் ஒத்திவைப்பது நியாயமற்றது என்றும் சிக்கல் இல்லாத பிற பகுதிகளில் உடனடியாகத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மறுவரையறை பணிகளை முடித்து பஞ்சாயத்துத் தேர்தலை நடத்தி முடிக்கத் தமிழக அரசுக்குத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
