சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்கீழ், பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் குவிந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்து இணையக் குற்றத் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் ஆர். திரிசூலி தாக்கல் செய்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்புத் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், ஆட்சியரிடம் பெறப்பட்ட எழுத்துபூர்வ அறிக்கையையும், எம்எல்ஏ மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
கடந்த ஜூலை மாதமே தலைமைச் செயலரிடம் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட தகவல் நீதிமன்றத்தில் தெரியவந்ததையடுத்து, நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
“ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருந்தால் புகார் இந்த அளவுக்கு வந்திருக்காது. தலைமைச் செயலர் முதல் தூய்மைப் பணியாளர் வரை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதில் யாரையும் காப்பாற்ற முயற்சித்து அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்,” என நீதிபதி எச்சரித்தார்.
இவ்வழக்கை விசாரிக்க ஐஜி அல்லது டிஐஜி நிலையில் உள்ள அதிகாரியை நியமிக்குமாறு அறிவுறுத்தியதுடன், டிசம்பர் 22ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும்வரை இவ்வழக்கின் விசாரணை விவரங்களை வெளியிட ஊடகங்களுக்கு நீ்திமன்றம் தடை விதித்துள்ளது. சமூக வலைதளப் பதிவுகளை உடனடியாக நீக்க இணையக்குற்ற காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நவம்பர் 27ஆஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
