சென்னை: சென்னையில் நடந்த நகைத் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ராஜஸ்தான் சென்ற தனிப்படை காவலர்கள்மீது, நகைக் கடை உரிமையாளரை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாக ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை காவல் ஆணையருக்குத் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, யானைக்கவுனி பகுதியில் உள்ள நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த கே.கே. ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வர்தா ராம் என்பவரிடம் சென்னை தனிப்படை காவலர்கள் அண்மையில் விசாரணை நடத்தினர்.
அப்போது காவலர்களுடன் வந்த தொழிலதிபர் ஒருவரும் அவரது ஆட்களும் வர்தா ராமை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வர்தா ராம் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார். அவரைத் தடுக்க முயன்ற அவரது சகோதரரும் நஞ்சு அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த வர்தா ராமின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவரின் மனைவி அளித்துள்ள புகாரின் பேரில், உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தமிழகக் காவலர்கள் ஐவர்மீது ராஜஸ்தான் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தமிழகக் காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறிய சென்னை காவல் ஆணையருக்கு தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார்.

