காவல்துறை கைது செய்த இளையர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

காவல்துறை கைது செய்த இளையர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

2 mins read
edddc25d-7d1a-4802-a638-7686662dfe2b
ஆகாஷ். - கோப்புப் படம்: தினத்தந்தி

சிவகங்கை: காவல்துறை கைது செய்த இளையர் ஆகாஷ் மரணமடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அவரது உறவினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சீயோன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், 37, அழகர், 36, ஆகிய இருவரும் நண்பர்கள். சில நாள்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் அவர்களை மூவர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டித் தாக்கினர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மானாமதுரை காவல்துறை ஆகாஷ் எனும் டெலிசன், 24, உள்பட இருவரைச் கைது செய்தது.

ஆகாஷ் காவல்துறையிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்தபோது அவருடைய கால் எலும்பு முறிந்தது.

அவரை அதிகாரிகள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை (மார்ச் 7) இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார்.

இதனை அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மானாமதுரை நான்கு வழிச்சாலையில் ஞாயிறு காலை கூடி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆகாஷ் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது இறப்புக்குக் காரணமான காவலர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா, காவல்துறை சூப்பிரிடென்டண்ட் அமல அட்வின், தேவகோட்டை துணை சூப்பிரிடென்டண்ட் கண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தால், மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என மானாமதுரை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆகாஷின் உடல் கூராய்வுக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் ஆகாஷின் உடற்கூராய்வு செய்ய ஒப்புதல் வழங்க மறுத்துவிட்டனர்.

இதனால் உடற்கூராய்வு செய்யப்படாமலேயே உடல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மானாமதுரையில் காவல்துறை கைது செய்த இளைஞர் ஆகாஷ் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்