நீலகிரி: பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ‘புல்லட்’ யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்ததால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை ‘புல்லட்’ என்று அழைக்கப்படும் யானை இடித்து சேதப்படுத்தி வந்தது.
அத்துடன், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களையும் உண்டுவிட்டுச் சென்றுவிடும்.
கடந்த இரண்டு மாதங்களாக அது 35 வீடுகளைச் சேதப்படுத்தியதுடன், மனிதர்களையும் தாக்கிக் கொன்றுள்ளது.
இதனால், பொதுமக்கள் எந்நேரமும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்லமுடியாமல் தவித்து வந்தனர்.
எனவே, யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தச் சூழலில், கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் கும்கி யானையின் உதவியுடன் ‘புல்லட்’ யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதைத்தொடர்ந்து, பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி பகுதியில் பதுங்கியிருந்த யானை மீது சனிக்கிழமை (டிசம்பர் 28) மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர்.
மயக்க நிலையை அடைந்த பின்னர் அதன் நான்கு கால்களையும் கயிற்றின் மூலம் கட்டி வைத்துள்ளனர்.
அதனை கும்கி யானையின் உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.