புதுடெல்லி: காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்திருந்த இரண்டு முக்கியமான இடைக்கால மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 11 டிஎம்சி பற்றாக்குறை நிலவுவதாகத் தமிழக அரசு சுட்டிக்காட்டி இருந்தது. இதனால் ஏறக்குறைய 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலுவையில் உள்ள நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிடக் கோரியும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், நீர்ப் பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் நீரைப் பகிர்ந்தளிக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டாவது மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசின் இவ்விரு கோரிக்கைகளையும் நிராகரித்து மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
இதனிடையே, தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் உமாபதி, புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு இடைக்கால மனுவை நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், கர்நாடகா அதனைச் செயல்படுத்தவில்லை என்று அவர் வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினர்.
“காவிரி நீர் விவகாரத்தில் எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்வீர்கள்? எத்தனை மனுக்கள் வந்தாலும் தற்போது அவற்றைத் தள்ளுபடி செய்யப்போகிறோம்,” என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இருப்பினும், புதிய மனுவில் உள்ள அம்சங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என வழக்கறிஞர் உமாபதி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அந்த மனு மீதான விசாரணையை மட்டும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
