காவிரி விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காவிரி விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

2 mins read
8a4e11f9-f329-4338-b010-4553025be336
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் இருமாநிலங்களின் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 550 கன அடி மட்டுமே வந்துசேர்வதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. - கோப்புப் படம்: ஈ தமிழ்
Google News Preferred Icon

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

விகிதாச்சார அடிப்படையில், தமிழகத்துக்கு அளிக்கவேண்டிய காவிரி நீரைத் தர கர்நாடக அரசு தவறிவிட்டதாகத் தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழகத்திற்கு ஏறக்குறைய 27 டிஎம்சி நீரைக் கர்நாடக அரசு தந்திருக்க வேண்டும் என்றும் தமிழகத்துக்குக் காவிரியில் இருந்து உரிய நீரைக் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் இருமாநிலங்களின் எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 550 கன அடி மட்டுமே வந்துசேர்வதாகத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி, கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சி, கபினி அணையில் 18.6 டிஎம்சி, ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி, ஹாரங்கியில் 7.8 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது என்று தெரிவித்த தமிழக அரசுக் கையிருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்குத் தற்போது விகிதாச்சார அடிப்படையில் கர்நாடகா ஏறக்குறைய 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது தொடர்பாகவும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு காவிரியில் இருந்து நடப்பாண்டு வழங்க வேண்டிய தண்ணீரை இன்னும் தரவில்லை.

இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக்குழு பிறப்பித்த உத்தரவை ஏற்க கர்நாடகா அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்