சென்னை: ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மூன்று குழுக்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் தமிழகம் மோசமான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மாநில வெள்ள நிலைமை குறித்து பேசினார்.
அப்போது நெருக்கடியை நிர்வகிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்று தமிழக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புயலால் சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
சேதமடைந்த பல்லாண்டு பயிர்கள், மரங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட ஸ்டாலின், உடனடியாக 2,000 கோடி ரூபாயை அவசர மீட்பு, புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
புயல் காரணமாக தொடர்ந்து அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ள நிலையில், விழுப்புரம், கடலூர், நீலகிரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் மட்டும் மூடப்படும். கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் டவுன், கிருஷ்ணகிரி, பேச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.