சென்னை: தவெக தலைவர் விஜய் பயன்படுத்தும் பிரசார வாகனத்தை மத்திய தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதற்காக அந்தப் பிரசார வாகனம் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சின் அதிகாரி தலைமையில் தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதாக இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் ‘மக்கள் சந்திப்பு’ பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூரில் நிகழ்ந்த துயரச்சம்பவம் தொடர்பாக 200க்கும் மேற்பட்டவர்களிடம் நேரில் சென்றும், சிபிஐ அலுவலகத்துக்கு வரவழைத்தும், தொலைபேசியில் அழைத்தும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 2, 3ஆம் தேதிகளில் ஏடிஜிபிகள், சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கரூருக்கு நேரில் வந்து விசாரணை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பொதுமக்கள் தவெக உள்ளூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி தவெக தலைவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் முன்னிலையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மத்திய தடயவியல் அறிவியல் துறை ஆய்வகக் குழுவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் கரூருக்கு வந்துள்ளனர். தவெக வலைவர் விஜய்யின் பிரசார வாகனம் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு சனிக்கிழமை (ஜனவரி 10) கொண்டு வரப்பட்டதை அடுத்து, ஆய்வகக் குழுவினர் பிரசார வாகனத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டதுடன், அதன் இயக்கம் குறித்தும் விவரங்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவரை வைத்து பேருந்தை முன்னும் பின்னும் சிறிது தூரம் இயக்கச் செய்தனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுசாமிபுரம் பகுதிக்கும் ஆய்வகக் குழு நேரில் சென்று பார்வையிட்டது. அங்கு இரண்டாவது நாளாக சாலை அளவீடு செய்யும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

