சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்விக்கு நிதி ஒதுக்கப்படும் என இந்திய அரசு மிரட்டுவதாகத் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
‘சமக்ரா சிக்ஷ அபியான் (எஸ்எஸ்ஏ)’ திட்டத்தின்கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்குக் கடந்த ஜூன் மாதம்வரை வரவேண்டிய ரூ.573 கோடி இன்னும் தரப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
“சென்ற ஆண்டு வரவேண்டிய 249 கோடி ரூபாயையும் மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்கீழ் வந்தால் மட்டுமே உடனே நிதி கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதனைப் பார்க்கும்போது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு அழுத்தம் தருகிறது என்பதுதான் உண்மை,” என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு மகேஸ் கூறினார்.
மேலும், “பல லட்சம் மாணவர்களுடைய கல்வியில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம். கல்விக்கான நிதியை அது எப்போதும் நிறுத்திவிடக்கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையில் இருந்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், அதேபோன்று கல்விக்கான நிதிச்சுமையையும் சமாளிப்போம் என்றும் சொன்னார்.
இபிஎஸ் கண்டனம்
இதனிடையே, தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை இன்னும் விடுவிக்காதமைக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், ஏறக்குறைய 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையும், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
“‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்ற குறளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை மத்திய அரசு இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்று திரு பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.