சென்னை: கல்வி, தொழில்முனைவு, புத்தாக்கம் ஆகிய துறைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பை இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மத்திய கல்வி இணையமைச்சர் சுகந்த மஜும்தாரும் பாராட்டியுள்ளனர்.
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய ‘இன்வென்டிவ் 2025’ நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
அப்போது உரையாற்றிய அமைச்சர் பிரதான், “தமிழ்நாடு எப்போதுமே புத்தாக்க, தொழில்முனைவு, உன்னத மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இம்மாநிலம் இந்தியாவிற்கு மிகச் சிறந்த பல தொழில்முனைவர்களையும், அறிவியல், புத்தாக்க வல்லுநர்களையும், ஆய்வாளர்களையும் வழங்கியுள்ளது. நாட்டைக் கட்டமைத்ததில் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளனர்,” என்று புகழாரம் சூட்டினார்.
இணையமைச்சர் மஜும்தாரின் உரையும் அத்தகைய கண்ணோட்டத்துடனேயே இருந்தது.
புத்தாக்க, தொழில்முனைவு மாநிலமாக தமிழ்நாடு நீடிக்கும் என்றும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியில் அம்மாநிலத்திற்கு முக்கியப் பங்குண்டு என்றும் அவர் சொன்னார்.
“தொழில்துறைத் தலைவர்கள் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானித்த பல நிறுவனங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். தொழில்நுட்பத்திலும் தொழில்துறையிலும் இந்தியா உலகளவில் பெருஞ்சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு அவர்களது பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை,” என்றார் திரு மஜும்தார்.
துடிப்பான தொழில்முனைப்புச் சூழலைக் கொண்டுள்ளதால், உலகளவில் தயாரிப்பு, தொழில்நுட்பத் துறைகளில் முதன்மையான நாடாகத் திகழ வேண்டும் என்ற நாட்டின் குறிக்கோளை எட்ட தமிழ்நாட்டின் தொழில்துறை அடித்தளமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, “இன்வென்டிவ் 2025 மூலமாக, தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்காக முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், நிதியாதரவு, எதிர்கால ஒத்துழைப்பிற்காக முதலீட்டாளர்களுக்கும் ஒரு தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்,” என்றார்.

