வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை

வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை

2 mins read
5c08e738-d50b-44f0-af0e-6595d1895982
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு. - படம்: புதிய தலைமுறை
multi-img1 of 3

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் களம், எண்ணிலடங்காதோர் கொண்டாடிய ஜனநாயகத் திருவிழாக்கோலமாக மாறியதை நேரில் காணமுடிந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது முதலே வாக்குச்சாவடிகளின் முன்பு மக்களின் நீண்டவரிசை காணப்பட்டது. காலை 10 மணிக்கு 36 டிகிரி வெயில் கொளுத்தத் தொடங்கியபோதும் வாக்குச்சாவடிகளை நோக்கிய மக்களின் படையெடுப்பு பன்மடங்கு அதிகரித்தவாறு இருந்தது.

அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் தொடக்கத்திலேயே தங்களது வாக்குகளைச் செலுத்திவிட்டனர். இளையர்கள் முதல் மூத்தோரும் சக்கர நாற்காலியில் வந்தோரும் வாக்குச்சாவடிகளில் காலையிலேயே அதிகம் திரண்டிருந்தனர்.

சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எல்லா ஊழியர்களுக்கும் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியதால் கடைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்ததால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி மாலை வரை வெறிச்சோடிக் காணப்பட்டன.

முற்பகல் 11 மணிக்குள் மொத்த வாக்காளர்களில் 37.56 விழுக்காட்டினர் தங்களது ஜனநாயகக் கடமையை வெற்றிகரமாக முடித்துவிட்டனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே நேரம் வாக்களித்தவர்களைக் காட்டிலும் 11.27 விழுக்காட்டினர் அதிகம். அந்தத் தேர்தலில் 11 மணி நிலவரப்படி, வாக்களித்தோர் விகிதம் 26.29 விழுக்காடு. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81%. பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துவிட்டனர். 2021ல் அந்த நேரத்தில் பதிவானதைவிட இது 17.2% அதிகம்.

இதே விறுவிறுப்பு இறுதிவரை தொடர்ந்ததால், வாக்குப்பதிவு 90 விழுக்காட்டைத் தாண்டும் நிலை இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 73.3% வாக்குகளும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 69.72% வாக்குகளும் பதிவாகி இருந்தன. தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒருமுறைகூட 80% வாக்குகள் பதிவாகவில்லை.

‘மாற்றம்’ என்னும் சொல்லை முன்னிறுத்தியுள்ள இந்தக் களத்தில் மக்கள் காட்டிய பேரார்வம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரியாத புதிர்.

2011 சட்டமன்றத் தேர்தலில், அதற்கு முந்திய தேர்தலைக் காட்டிலும் ஏறத்தாழ 7% அதிகமாகி, 78.29% விழுக்காட்டு வாக்குகள் பதிவானது. அந்தத் திடீர் ஏற்றம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

இப்போதும் அதேபோல 7% அதிகரித்து 80%ஐத் தாண்டினால் ஆட்சி மாறுமோ என்ற நினைப்புக்கு இடையே கணக்கு ஒன்று குறுக்கிடுகிறது.

‘எஸ்ஐஆர்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு ஏராளமான போலி மற்றும் செயல்படாத வாக்குகள் நீக்கப்பட்டதால் தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டது. இந்தத் தேர்தலில் ஒருவேளை 80.6 விழுக்காடு பதிவானால்கூட அது, 2021 தேர்தலின் 73.63 விழுக்காட்டுக்குச் சமம் என்பதுதான் அந்தக் கணக்கு. அல்லது 75 விழுக்காடு பதிவானால், 2021 தேர்தலைவிட 33 லட்சம் வாக்காளர்கள் குறைவாக வாக்களித்ததாகக் கணக்கு வரும். அதனால், புதுச்சேரியைப் போல 90 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குப்பதிவு மட்டுமே வரலாறு படைக்கும் சாதனையாகக் கருதப்படும். வெள்ளிக்கிழமை காலைக்குள் அதிகாரபூர்வ வாக்குப் பதிவு விகிதம் அறிவிக்கப்பட்டுவிடும்.

இந்நிலையில், வாக்கு விகிதம் கூடினால் மாற்றம் வருமா? வராதா? என்ற கேள்வி மட்டும் மாற்றமின்றி தொடர்கிறது. -திருநா

குறிப்புச் சொற்கள்