சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான ‘ஜெம்’ கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வீரமணிக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள ஒன்பது ‘போக்சோ’ வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும், வழக்கு தொடர்பான காணொளிகள் ஊடகங்களில் வெளியானதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது முன்னிலையான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அடுத்த பத்து நாள்களுக்குள் மேலும் இரு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரகாஷ் தலைமறைவாக உள்ளதால், பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், அவரது முன்ஜாமீன் மனு இம்மாதம் 16ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் முன்னிலையாக மூன்று சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ள தகவலைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை இம்மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
