தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லையை ஒழிக்க நடவடிக்கை

2 mins read
de5e8445-7bc2-4e98-ab7b-4cb4463ec9e7
நாய்களால் மனிதருக்கும் மனிதர்களால் நாய்க்கும் தொல்லை ஏற்படாதிருக்க விமான நிலையத்தில் 24 மணிநேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விலங்கு நலனைப் பராமரிக்கும் அரசு சாரா அமைப்பு ஒன்றின் துணையுடன் விமான நிலைய அதிகாரிகள் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அதன்படி, விமான நிலையத்தில் நாய்கள் நடமாடாமல் இருக்கும் வகையில் அந்த அமைப்பைச் சேர்ந்த குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும். குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை மாறி மாறி அந்தப் பணியில் ஈடுபடுவர்.

விமானப் பயணிகளுக்கு நாய்களால் தொல்லை ஏற்படாமல் இருப்பதையும் தொல்லை தரும் நாய்களை யாரும் துன்புறுத்தாமல் இருப்பதையும் உறுதிசெய்ய அந்தக் கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது.

அதன் தொடர்பில், விமான நிலைய வளாகத்திற்குள் தனித்துவமான நாய் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிலையம் ஒன்று செயல்படும்.

இந்தியாவிலேயே அத்தகைய நிலையம் அமைவது சென்னை விமான நிலையத்தில்தான் என்று தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

சென்னை உள்நாட்டு, அனைத்துலக விமான நிலையங்களில் பயணிகளுக்கு நாய்களால் தொல்லை ஏற்படுவதாக அண்மைய ஆண்டுகளில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. பயணிகள் மட்டுமன்றி விமான நிலைய ஊழியர்கள், பாதுகாவல் பணியாளர்களும் நாய்கள் கடித்துவிடுமோ என்ற அச்சம் இருப்பதாகப் புகார் கூறி வந்தனர்.

விமான நிலையங்களிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நாய்கள் காணப்படுவதும் வழக்கமான நிகழ்வாகத் தொடர்ந்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பறவைத் தொல்லை

இதனிடையே, விமான ஓடுபாதைகளில் பறவைகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், விமானப் போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டர் பூம்ஸ்’ என்ற இடி ஓசை ஒலி எழுப்பும் கருவிகள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுவரை, பட்டாசுகள் வெடித்து பறவைகள் விரட்டப்பட்டு வந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தராததால் இடி ஓசை எழுப்பும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்