சென்னை: சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் கூடிய இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பனை அறைகள் அமைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் 1,262ஆக அதிகரிக்கும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போதுமான கழிவறைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுவதாகத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பி வருகின்றனர்.
இந்த நீண்டகாலக் கோரிக்கைக்கு சென்னை மாநகராட்சி தற்போது செவிசாய்த்துள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாநகராட்சி, அவற்றைக் கட்டணமின்றி பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறார்கள், திருநங்கைகள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்தக் கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பாதுகாப்பு அம்சங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கழிப்பிடத்துக்கும் தனித்தனியாக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, கழிப்பிடப் பகுதிகள் தூய்மையாகப் பராமரிக்கப்படும்.
பொதுமக்கள் இந்த இலவச ஒப்பனை அறைகள் குறித்து தங்கள் பாராட்டுகளையும் குறைகளையும் தெரிவிக்க ‘கியூஆர்’ கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறைகள் ஏதும் இருப்பின் அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

