சென்னை: வரலாற்றில் முதன்முறையாக ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல் செய்து சாதித்துள்ளது சென்னை மாநகராட்சி.
இந்நிலையில், சொத்து வரி கட்டாதவர்களின் வீட்டு வாசலில் ‘பொக்லைன்’ இயந்திரம் கொண்டு தோண்டுவது, குப்பைத் தொட்டி வைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்துகின்றனர். அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்த வேண்டும்.
கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.1,750 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்ட நிலையில், 2024-25 நிதியாண்டில், மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக ரூ.2,025 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தொழில் வரி ரூ.570 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட ரூ.38 கோடி அதிகமாகும்.
வரியை முன்கூட்டியே செலுத்தினால் 5% தள்ளுபடியும் தாமதமாகச் செலுத்தினால் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, வரி செலுத்தாத வீடுகளை ஜப்தி செய்யப்போவதாக மாநகராட்சி, உள்ளாட்சி அதிகாரிகள் மிரட்டுவதாக ஒருதரப்பினர் புகார் எழுப்பியுள்ளனர். பண்ருட்டி நகராட்சியில், ஒரு வீட்டின் முன்பு பள்ளம் தோண்டப்படுகிறது. மதுரையில், சொத்து வரி கட்டாத நிறுவன அலுவலகம் முன்பும், காரைக்குடியில் ஓர் உணவக வாசலிலும் குப்பைத் தொட்டிகளை உள்ளாட்சி அதிகாரிகள் வைத்தனர்.
சென்னையில் 1,800 ரூபாய் தண்ணீர் வரி கட்டவில்லை என்பதால் ஒரு வீட்டைக் கையகப்படுத்தப் போவதாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பு திமுக ஆட்சியில் வரி கடுமையாக உயர்ந்திருக்கிறது என்றும் வசூலிப்பு முறைகளும் மோசமாக உள்ளது என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.