சென்னை: சென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலோன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், 39 மாணவர்கள் சிலர் மூச்சுவிடச் சிரமப்பட்டு மயக்கமடைந்தனர்.
அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் பள்ளி வளாகத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அதில் வாயுக்கசிவிற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர்களும் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
திருவொற்றியுரில் அந்தப் பள்ளியில் மட்டுமே வாயுக்கசிவு உணரப்பட்டுள்ளது என்பதால், பள்ளி ஆய்வுக்கூடத்தில் இருந்து தான் வாயுக் கசிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றித் தகவலறிந்ததும் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல ஒரே நேரத்தில் பள்ளி முன்பு பெற்றோர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். காலையிலேயே வாயுக்கசிவு ஏற்பட்டது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினரிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


