சென்னை: பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைக்கும் ‘சென்னை ஒன்’ எனும் செயலியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
இந்தியாவின் இத்தகைய முதல் செயலி அது என்று சென்னை ஒருங்கிணைக்கப்பட்ட பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இந்தச் செயலியில் புறப்படும் இடத்தையும் சென்றுசேரும் இடத்தையும் குறிப்பிட்டு பயணச்சீட்டு பெற்றால், அதன்மூலம் சென்னை பெருநகரப் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்ய முடியும்.
சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவை பொதுப் போக்குவரத்துச் சேவைகளாக உள்ளன.
இந்தப் போக்குவரத்துச் சேவைகளை நாள்தோறும் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மூன்று போக்குவரத்துச் சேவையையும் ஒருங்கிணைத்து ஒரே பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய உதவும் ‘சென்னை ஒன்’ செயலியைச் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கி வந்தது.
ஒரே மின்னிலக்கத் தளத்தில் பல்வேறு பயணச் சேவை வழங்குநர்களை ஒருங்கிணைக்கக்கூடிய இந்தச் செயலியில் ‘நம்ம யாத்ரி’ ஆட்டோக்களையும் வாடகைக் கார்களையும் இணைப்பதும் திட்டம்.
புதிய ‘சென்னை ஒன்’ செயலி பயணிகளுக்கு மிகவும் மாறுபட்ட பயண அனுபவத்தைத் தரும் என்று கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் செயலியில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள 600 பேருந்து நிறுத்தங்கள், 650 பேருந்து வழித்தடங்கள், 3,500 பேருந்துகளின் தகவல்கள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களின் நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பயணிகள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டுகளை வாங்கும் சிரமத்தைக் குறைப்பது இந்தச் செயலியின் நோக்கம். ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தி இதில் பயணச்சீட்டை வாங்கவேண்டும்.
‘சென்னை ஒன்’ செயலியை ஆப்பிள், ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சென்னையின் வருங்காலப் பயணமுறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.