சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்தியுள்ளார். அந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அந்த அரசு மருத்துவமனையில் புற்றுநோய்ச் சிறப்பு மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அவர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போது மருத்துவர் பாலாஜி ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
தனது தாய்க்கு சரியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, விக்னேஷ் அந்த மருத்துவரைக் கத்தியால் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகமானோர் கூடியிருந்த ஒரு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மீது பட்டப் பகலில் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது மருத்துவமனை பணியாளர்களுக்கும் அங்கிருந்த நோயாளிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில், பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி, அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைதான நிலையில் மேலும் இருவரை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
மருத்துவர்கள் போராட்டம்
கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்தவாறு மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்தும், பணிப் பாதுகாப்பு கேட்டும் துணை முதல் அமைச்சரின் கார் முன்பாக அமர்ந்து அரசு மருத்துவர்கள் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மருத்துவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி, மருத்துவர் சங்கத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, அவரது தலையில் 4 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மருத்துவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். மருத்துவர் பாலாஜிக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
நேரில் பார்வையிட்ட அமைச்சர்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 6 மாதங்களாக விக்னேஷ் என்பவரின் தாயார் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையிலேயே தனது தாயை விக்னேஷ் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது விக்னேஷிடம் “நோயாளியை முழுமையாகக் குணமாக்கி உயிரைக் காப்பாற்ற முடியாது, ஆனால் அவரது வாழ்நாளை கீமோதெரபி சிகிச்சையால் ஓரளவுக்கு அதிகரிக்கலாம்,” என மருத்துவர் பாலாஜி கூறியிருந்தார். அவரது ஒப்புதலின்பேரில்தான் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
“இந்த நிலையில், தன் தாயை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்த மருத்துவர் பாலாஜி என்ன சொன்னார் என தெரியவில்லை, அந்த நோயாளியின் மகன் விக்னேஷ் எவ்வாறு புரிந்துகொண்டார் என்றும் தெரியவில்லை.
“காலையில், வெளிநோயாளியைப் போல் மருத்துவர் பாலாஜியின் அறைக்குச் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு மருத்துவரைக் கத்தியால் குத்திவிட்டார். மருத்துவரைக் கத்தியால் குத்திவிட்டு வெளியே வந்த விக்னேஷை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர்,” என்று விளக்கினார்.
கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.