சென்னை: அரிய ரத்தப் பிரிவைச் சேர்ந்த இளையருக்கு வேறொரு ரத்தப் பிரிவைக் கொண்டுள்ள அவரது தாயின் சிறுநீரகத்தைப் பொருத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த 30 வயதான அந்த இளையர் சிறுநீரகச் செயல் இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவருக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டது என்றும் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் பிரிவு இயக்குநர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.
“பாதிக்கப்பட்ட இளையர் ‘பாம்பே ஓ’ ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர். அதே ரத்த பிரிவைச் சேர்ந்த ஒருவரின் சிறுநீரகம் கிடைப்பது சாத்தியற்ற ஒன்று. எனவே, அவருடைய தாயாரது சிறுநீரகத்தைப் பொருத்த முடிவு செய்தோம்,” என்கிறார் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன்.
உலகில் முதன்முறையாக இதுபோன்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றும் இந்தச் சவாலை இளையரின் குடும்பத்தார் துணிச்சலுடன் எதிர்கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தச் சவாலான அறுவை சிகிச்சையை ஜப்பானிய தொழில்நுட்பத்தின் உதவியோடு மேற்கொண்டோம். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த இளையர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்,” என்று மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.