சென்னை: தென்னிந்திய மாநிலங்களில் பதிவாகும் தங்கக் கடத்தல் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகனச் சோதனை நடவடிக்கையின்போது 28 கிலோ தங்கம் சிக்கியது.
இது தொடர்பாக நான்கு பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரும் வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப் பொருள்களைக் கடத்தி வரும் ‘குருவி’களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அண்மையில்தான் துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.17 கோடி ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் கடற்கரைப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது அவ்வழியே சென்ற ஒரு சொகுசுக் காரை நிறுத்தினர்.
அப்போது காரில் வந்த நான்கு பேர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசவே, சந்தேகத்தின் பேரில் காவலர்கள் காரை சோதனையிட்டபோது, அதில் பெட்டிப் பெட்டியாக தங்க நகைகள் இருந்தன.
முதற்கட்ட விசாரணையின்போது தங்க நகைகளை வியாபாரத்திற்காக சவுகார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 28 கிலோ நகைகளும் வணிக வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றுக்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.