திருச்சி: காவிரி நீர் பிரச்சினை உட்பட, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்து சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி நீரைத் திறக்காத கர்நாடக அரசு, இந்திய அரசுமீது வழக்கு தொடர வேண்டும். தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு பெற்று டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வழங்கிட வேண்டும் என ஒரு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பா, குறுவை சாகுபடி பொய்த்ததால் விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.5,000 வழங்குவதோடு, விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாதாந்தர ஓய்வூதியத் தொகையை ரூ.500லிருந்து ரூ.5,000ஆக உயர்த்த வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், சென்னை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார்.
