சென்னை-தூத்துக்குடி இரவு நேர விமானச்சேவை விரைவில் தொடக்கம்

சென்னை-தூத்துக்குடி இரவு நேர விமானச்சேவை விரைவில் தொடக்கம்

2 mins read
a03b6783-7a77-4344-9f64-e91595653f34
தூத்துக்குடி விமான நிலையம். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்குச் செவிசாய்க்கும் வகையில் சென்னை, தூத்துக்குடி இடையே இனி நாள்தோறும் இரவுநேர விமானச்சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த இரவுநேரச் சேவையானது, வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் துவங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது இரு நகரங்களுக்கும் இடையே, நான்கைந்து விமானச்சேவைகள் உள்ளன. ஆனால் அந்த விமானங்கள் அனைத்துமே பகலில் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி அல்லது முக்கியமான பணிகளுக்காக இரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்ளும் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

சென்னை அல்லது தூத்துக்குடிக்குச் செல்வோர், ஓர் இரவு கட்டாயம் அந்த ஊர்களில் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து காலையில் பணி நிமித்தமாகத் தூத்துக்குடி செல்பவர்கள் ஒரேநாளில் மீண்டும் ஊர் திரும்ப வேண்டும் என்றால் மிகவும் அவசர அவசரமாகக் கிளம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல் ஓர் இரவைத் தூத்துக்குடியில் செலவிட வேண்டியிருக்கும்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இண்டிகோ நிறுவனம் எதிர்வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் தூத்துக்குடி-சென்னை இடையே இரவுநேர விமானச் சேவையைத் துவங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னையில் இருந்து தினமும் மாலை 6:15 மணிக்குத் தூத்துக்குடி புறப்படும் விமானம், இரவு 7:55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். பின்னர் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்படும் விமானம் இரவு 9:45க்குச் சென்னை சென்றடையும்.

இப்புதிய சேவை தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என துறைசார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்துதான் வணிக ரீதியில் வேகமாக வளர்ந்து வருகிறது தூத்துக்குடி விமான நிலையம். இங்கிருந்து இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் எனத் தொழில்துறையினர் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

விமான நிலைய விரிவாக்கத்தின்போது இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்