தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்ய தமிழகம் செல்லும் தலைமைத் தேர்தல் ஆணையக் குழு

2 mins read
a70ec863-229d-44ee-97a6-6123d0e5a93d
பிப்ரவரி முதல்‌ வாரம் தமிழகம் செல்லத் தலைமைத் தேர்தல் ஆணையக் குழு திட்டமிட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு ஒன்று தமிழகத்துக்குச் செல்லவிருக்கிறது.

பிப்ரவரி முதல்‌ வாரம் தமிழகம் செல்லும் இக்குழுவினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம்.

தேர்தல் குழுவினர் தமிழகத்தில் இரண்டு நாள்கள் முகாமிட்டுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வர். அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனை முடிந்ததும் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் செய்தியாளர்களைத் சந்திப்பார் எனத் தெரிகிறது.

இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் வருகைக்கு முன்பு துணைத் தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வந்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அப்பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க 15.74 லட்சம் பேர்‌ விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த மொத்த வாக்காளர்களில் ஏறக்குறைய 97 லட்சம் பேரின் பெயர்கள் எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டன. இதையடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.44 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்.

நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் ‌பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவித்த தேர்தல் ஆணையம், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இதையடுத்து, 15,74,351 பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், பெயர் நீக்க 96,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அனைத்து விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்