சென்னை: தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் மண்ணில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு அறிமுகமாகி இருப்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் கூறினார்.
கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.39 கோடி செலவில் அமையவுள்ள அருங்காட்சியகங்களுக்கு வியாழக்கிழமை (ஜனவரி 23) திரு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகமும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளன.
அதன்பின்னர் உரையாற்றிய திரு ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வு முடிவுகளைத் தற்போது அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
“தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே உருக்கு இரும்புத் தொழில்நுட்பம் தமிழ் மண்ணில் அறிமுகமாகிவிட்டது என உறுதியாகக் கூறலாம்.
“கிமு 4,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாட்டுக்கு வந்தது என ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. அதனால், 5,300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு உள்ளது என நாம் உறுதியாகச் சொல்லலாம். இதனை ஆய்வு முடிவுகளாக நான் அறிவிக்கிறேன்,” என முதலமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் இருந்துதான் இரும்பின் தொன்மை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியது: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக கீழடி அகழாய்வு முடிவுகள் காட்டுகின்றன.
பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது.
தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.
தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள்.
உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.