சென்னை: தமிழக மக்கள் மாற்றத்துக்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டியுள்ளதாகவும் அவர்களுக்குத் தன் வாழ்நாள் நன்றியை காணிக்கையாக்குவதாகவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணி எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கட்சி தொடங்கியதில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம்.
“எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் துணிச்சலாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன,” என்று விஜய் கூறியுள்ளார்.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் தமிழகத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றும் அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது என்றும் விஜய்யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அரசியல் போரில் வென்றது தவெக வெற்றி மட்டுமல்ல, தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுபூர்வமான ஜனநாயகமும்தான் என்று குறிப்பிட்டுள்ள திரு விஜய், இதன் காரணமாகவே தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக் கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

