போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள்: கார்த்தி சிதம்பரம் கவலை

1 mins read
7012bdd2-9ce4-4b99-97e9-dd74f58ba91c
கார்த்தி சிதம்பரம். - படம்: இந்து தமிழ்

சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லும் சிறுவர்கள்கூட போதைப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துவிட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அண்மையில் திருத்தணி ரயில் நிலையத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளியை நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பியான கார்த்தி சிதம்பரம் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுக்க வேண்டும் என்றும் மக்கள் பாதுகாப்புதான் முக்கியம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

“தமிழகக் காவல்துறை தங்கள் முழு பலத்தைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்த வேண்டும். பொதுமக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்