கரூர்: சனிக்கிழமை கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம் 39 பேரை காவுகொண்ட நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தம் 6 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 39 பேர் பரிதாபமாக பலியாகிவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், குழந்தைகள் பலரும்கூட கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடியதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
குழந்தைகளில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடைந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோரும் உடன் வந்தவர்களும் செய்வதறியாது கண்ணீர்விட்டுக் கதறினர்.
அப்போது காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று குழந்தைகளை மீட்டு, தங்கள் கைகளில் ஏந்தியபடி ஆம்புலன்ஸ், இதர வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அக்காட்சிகள் வெளியாகி, பார்ப்போரைக் கலங்கடித்தன.
இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.