தவெகவின் பிரசார பீரங்கிகளாக மாறிய சிறார்கள்

தவெகவின் பிரசார பீரங்கிகளாக மாறிய சிறார்கள்

2 mins read
0af0bdbf-4b23-41fc-b44d-3c6a2e119c57
தவெகவுக்காக, விசில் சின்னத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் சத்தமின்றி நடந்த பிரசாரத்தில் சிறார்களின் பங்களிப்பு முக்கியமானது. - படம்: தினமலர்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத் தேர்தல் களம் வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டுள்ளது.

தவெக என்ற புதுக்கட்சிக்கு சிறார்களே பிரசாரப் பீரங்கிகளாக மாறியதுதான் இதற்கு முதன்மைக் காரணம் என்கிறார்கள் தேர்தல் களப் பார்வையாளர்கள்.

முதன்முறையாகத் தேர்தல் களம் கண்ட தவெக, விஜய் என்ற ஒரு தலைவரை மட்டுமே முன்னிறுத்திக் களப்பணியாற்றி வெற்றி பெற்றுள்ளது.

திமுக, அதிமுக போன்ற பெரிய அரசியல் கட்சிகளுக்குரிய மிகப்பெரிய கட்டமைப்பு, தேர்தல் அனுபவம் எனத் தவெகவிடம் எதுவும் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு வீட்டிலும் தனது ஆதரவாளர்கள் இருப்பதால் வெற்றி உறுதி என்று முழங்கினார் விஜய். இப்போது அது சரியான முழக்கம்தான் என்று அரசியல் கவனிப்பாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

விஜய்க்கு வாக்களித்த லட்சோப லட்சம் குடும்பங்களின் வீட்டிற்குள் சத்தமின்றிப் பிரசாரம் நடந்துள்ளது. மழலைத்தனம் மாறாத சிறார்கள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

“சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிசயம் நடக்கப் போகிறது,” எனத் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே தமிழக அரசியலில் அதிசயம் நிகழ்ந்துவிட்டது.

தேர்தலுக்கு முன்பாக, தவெக இத்தனை பெரிய வெற்றியைப் பெறும் என யாருமே கூறவில்லை.

அனுபவம் வாய்ந்த, தொண்டர் பலமும் பணபலமும் கொண்ட கட்சியினர் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தனர். தவெக இதுபோன்ற பிரசாரப் பாணியைப் பின்பற்றவில்லை.

திமுக, அதிமுக தலைவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் இருமுறை சென்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தவெக தலைவரோ, அனைத்து மாவட்டங்களுக்கும்கூட செல்லவில்லை.

ஆனால், தவெகவுக்காக, விசில் சின்னத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் சத்தமின்றி நடந்த பிரசாரத்தில் சிறார்களின் பங்களிப்பு முக்கியமானது.

அரசியல், தேர்தல் என்பது குறித்து எந்தவிதப் புரிதலும் இல்லாத குழந்தைகள், “விஜய்க்கு வாக்களிக்க வேண்டும்,” எனப் பெற்றோர், உறவினர்களிடம் வலியுறுத்தினர்.

“தங்கள் குழந்தைகளின் பேச்சை பெற்றோரால் தட்டமுடியவில்லை. குழந்தைகளைப் பிரசாரம் செய்வதற்கு விஜய் தூண்டிவிடுகிறார். அவரது பேச்சு உளவியல் ரீதியில் குழந்தைகளைப் பாதிக்கிறது,” என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இறுதியில் மழலைகளின் வார்த்தைகளே வெற்றிபெற்றுள்ளது என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.

குறிப்புச் சொற்கள்