மேக வெடிப்பு: சென்னை மாநகரையும் மக்கள் மனத்தையும் குளிர்வித்த மழை

மேக வெடிப்பு: சென்னை மாநகரையும் மக்கள் மனத்தையும் குளிர்வித்த மழை

1 mins read
d052ac74-9a94-4865-ad7b-f95c2f559358
மேக வெடிப்பு காரணமாகவே பலத்த மழை பெய்ததாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: திடீர் மேக வெடிப்பு காரணமாக சென்னையில் ஒருமணி நேரத்துக்குள் 14 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

சென்னை நோக்கி வந்த நான்கு விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டன.

15 விமானங்களின் புறப்பாடு தாமதமானதாகவும் விமானச் சேவையில் ஏற்பட்ட பாதிப்பால் பயணிகள் அவதிக்காளானதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைப் புறநகர்ப் பகுதியான மணலியில் ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ மழையும் மொத்தமாக 26 செ.மீ மழையும் பதிவானது.

கொரட்டூர் பகுதியில் 13 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தக் கனமழை தங்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியதாக சென்னைவாசிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மேக வெடிப்பு காரணமாகவே பலத்த மழை பெய்ததாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதாகத் தெரிகிறது.

நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மழைப்பொழிவு சீராக இருந்தாலும், மற்ற மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை எனக் கூறப்பட்டது. குறிப்பாக, சென்னையில் அவ்வப்போது கடும் வெயிலின் தாக்கம் நீடித்தது.

இந்நிலையில், மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழை சென்னை மாநகரையும் மக்கள் மனத்தையும் குளிர்வித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்