தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐடி துறை சார்ந்த ஏற்றுமதியில் ரூ.15,000 கோடியை எட்டிப்பிடித்து கோவை சாதனை

2 mins read
b4abd040-3584-4341-a7f4-66290fdc492c
வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவில், கோவை உள்ளிட்ட பல நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

கோவை: தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஏற்றுமதி ரூ.15,000 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் மூலம் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

வேகமாக வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவில், கோவை உள்ளிட்ட பல நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஹிங்கோலி தொகுதி எம்பி நாகேஷ் பாபுராவ் ஷிண்டே பாட்டில் அஸ்திகர், ஐடி துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்குத் தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பதில் சிறப்புப் பொருளியல் மண்டலத் தரவுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. மாநில ‘ஜிடிபி’யில் 15%பங்களிப்பு ஐடி துறையில் இருந்து பெறப்படுகிறது.

இந்தியா முழுவதும் செய்யப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த முதலீடுகளில், 11 விழுக்காட்டை தமிழகம் ஈர்க்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்றுமதியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களில், கோவை முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், ஐடி துறையின் ஏற்றுமதியானது, கோவையில் இருந்து ரூ.15,106 கோடியாகப் பதிவாகி உள்ளது. ரூ.1,905 கோடி ரூபாயுடன் மதுரை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

கோவையில் தொழிற்கல்விச் சூழல், திறன்மிகு பணியாளர்கள் ஆகியவை இச்சாதனைக்குக் காரணம் என்றும் சிறப்புப் பொருளியல் மண்டலங்களில் இருந்து, கடந்த நிதியாண்டில் 11,986 கோடி ரூபாய்க்கு ஐடி துறையில் ஏற்றுமதி நடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள பொருளியல் மண்டலங்களில் மட்டும், தற்போது ஏறக்குறைய 69,000 பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர, எஸ்டிபிஐ எனப்படும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் இருந்து, ரூ.3,119 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

“புதிய நிறுவனங்களின் துவக்கம், விரிவடையும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 30%ஐ எட்டிப்பிடிக்கும்,” என துறைசார் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்