கோயம்புத்தூர்: தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 2022ல் இருந்து கிட்டத்தட்ட 40, 50 விழுக்காடு கூடியுள்ளது.
கோயம்புத்தூரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் காணச் சென்ற தமிழக மகளிர்க்கான மாநில ஆணையாளர் ஏ.எஸ். குமாரி, செய்தியாளர்களிடம் பின்னர் பேசியபோது அவ்வாறு கூறினார்.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்ததை மூடி மறைக்காமல் முன்வந்து தைரியமாகச் சொல்வதால் புகார்களின் எண்ணிக்கை உயர்வதாக திருவாட்டி குமாரி தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். அதனால் புகார் மனுக்கள் அதிகரித்துள்ளன.
“மகளிர் ஆணையம், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,” என்று திருவாட்டி குமாரி சொன்னார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணையும் அவருடன் இருந்த ஆண் நண்பரையும் திருவாட்டி குமாரி நேரில் சென்று சந்தித்தார்.
இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.

