சென்னை: சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணி, சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுத் குழு காவல்துறையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
அவர் சிங்கப்பூருக்குத் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
82 வயதான தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது ஏழு போக்சோ வழக்குகள் உட்பட மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட உதவியாளர் சாந்தி, அவரது கணவர் உட்பட இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெம் வீரமணியின் வழக்கை மூடி மறைக்கப் பெரிய அளவில் பணமும் நகைகளும் லஞ்சமாகக் கைமாறியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சிறப்புப் புலனாய்வுத் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அர்ச்சனா வீரமணிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற அர்ச்சனா வீரமணியைக் காவல்துறையினர் விமான நிலையத்தில் வைத்துத் தடுத்து நிறுத்தி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது திடீரென அர்ச்சனா வீரமணி மயங்கி விழுந்தார்.
அதையடுத்து, காவல்துறையினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்படத் தயாரான நிலையில் அர்ச்சனா காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
