திருப்பூர்: தமிழக அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு ஆள்களைத் திரட்ட பணம் கொடுப்பதாகக் கூறப்படுவதுண்டு.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் நூதன அறிவிப்பை வெளியிட்டு கட்சிக் கூட்டத்துக்கு ஆள் திரட்டியுள்ளார்.
திருப்பூர், பெருமாநல்லூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் இளையரணிச் செயலாளரான வேல்முருகன் சுவாமிநாதன் என்பவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்துக்காக 2,000 பேர் திரண்டிருந்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியமான பிரமுகர்கள் திமுக அரசை விமர்சித்தும் அதிமுக புகழ்பாடியும் பேசியதை அந்தக்கூட்டம் ஆர்வத்துடன் கேட்டது.
கூட்டம் முடிந்த கையோடு, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் தாங்கள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினர்.
‘கூட்டமாக வாருங்கள், நாற்காலிகளுடன் செல்லுங்கள்’ என்று அதிமுக தரப்பில் வெளியான நூதன அறிவிப்பே இதற்குக் காரணம் என இந்து தமிழ் திசை ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கூட்டத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாற்காலி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பலர் குடும்பம் குடும்பமாக வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சிலர் குடும்பத்துடன் வந்து ஆறு, ஏழு நாற்காலிகளை அள்ளிச் சென்றதாகத் தெரிகிறது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் அள்ளிச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

