சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களம் காணப்போவதாக அறிவித்துள்ளன.
இம்முறை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை வெளியே இருந்து ஆதரவு அளித்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறப்போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் இடதுசாரிகள் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இரு கட்சிகளுக்கிடையே எட்டப்பட்ட தீர்மானத்தின்படி, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலாகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான குரலாகவும் இடதுசாரிகள் ஒலிப்பார்கள் என்றும் ஜனநாயக சக்திகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லெனினிஸ்ட் கட்சிகள் இணைந்து செப்டம்பர் 15ஆம் தேதி தங்களது வேட்பாளர்களை முறைப்படி அறிவிக்க உள்ளன.
திமுக, அதிமுக, தவெக போன்ற முதன்மை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள நிலையில், இடதுசாரிகளின் இந்த முடிவு இடைத்தேர்தல் களத்தில் போட்டியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

