சிவகாசி: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரப் பிரசாரத்தை மேற்கொள்ளும். கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடக்கத்திலேயே ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு என்றும் கட்சி ரீதியாகத் தனித்தே இயங்குவோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போதும் தவெக கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“ஆட்சி தொடர மட்டுமே ஆதரவு என்ற அவர்களின் நிலைப்பாட்டின்படி தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் தனித்துப் போட்டியிடுவது அவர்களின் உரிமை. அக்கட்சிகளின் இந்த முடிவு தவெக கூட்டணிக்கு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்,” என்றார்.
அதேவேளையில், விசிக அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இவ்விரு தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிபெற முழு ஒத்துழைப்பு நல்கும்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்துக் கேட்டபோது, அப்பயணம் முழுமையாக முடிவடையாததால் அதுகுறித்து இப்போது கருத்துக்கூற இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.
திமுகவினரின் பேச்சு குறித்துப் பேசிய அவர், “மனித மாண்புகளுக்கு மரியாதை அளித்துப் பேச வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியிருந்தார். ஆனால், அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட முன்னணித் தலைவர்களின் பேச்சு மாண்புகளைக் கடைப்பிடிப்பதாக இல்லை.
“அவர்களின் இத்தகைய பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. இது தவெகவுக்கு மட்டுமல்லாமல், திமுகவுக்கே எதிராகத் திரும்பக்கூடும்,” என்று சுட்டிக்காட்டினார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், “யார் மனதையும் காயப்படுத்தும் வகையில் திமுகவினர் பேச மாட்டார்கள்,” எனக் கூறியிருந்த நிலையில், முதலமைச்சரையே ஒருமையில் பேசுவதும், பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவதும் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களின் பேச்சாக இல்லை.
“இந்த நடவடிக்கை திமுகவின் நன்மதிப்பையே சீர்குலைக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,” என்றார் திருமா.
மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், மக்களின் ஆதரவும் ஒத்திசைவும் இல்லாமல் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

