வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு

வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு

படம்: ஊடகம்

25 May 2025 - 7:00 pm

1 mins read

விருதுநகர்: வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வந்த மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் இதில் 5,003 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம், வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தொடங்கின.

முதற்கட்ட அகழாய்வில் பாசிமணிகள், சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லுவட்டுகள், இரும்பு உருக்குக் கழிவுகள், சங்கு வளையல்கள் என ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழாய்வில், பழங்கால பானை ஓடுகள், சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என 4,660 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளுக்காக 22 குழிகள் தோண்டப்பட்டு, 5,003 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“அகழாய்வுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மதிப்பீடு செய்து, ஆவணப்படுத்தும் பணிகள் அடுத்த நான்கு மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும்,” என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்