தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்: 26 தீர்மானங்களை நிறைவேற்றிய தவெக

2 mins read
2f65da84-195c-4c8c-8cf7-703721a0fc73
விஜய் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்களை நிறைவேற்றிப் பேசிய விஜய். - படம்: இந்து தமிழ் திசை ஊடகம்

சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமைக் கட்சி அலுவலகத்தில் விஜய் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மொத்தம் 138 நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தை ஆளும் திமுக அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மின்கட்டண வசூலானது மாதாந்திர கணக்கீட்டு முறையின்படி அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு இன்னும் இதனை நிறைவேற்றாமல் உள்ள நிலையில், இதனை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு கண்ணியத்தோடு பதிலடி கொடுக்கவேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுரைகள் கூறியுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்தக் கூட்டத்தில், தமிழ் மொழியில் தலையிட மத்திய அரசுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் உரிமை இல்லை; உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்;

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு கண்டனம்; பாலியல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத்திருத்தம் தேவை; மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு செயல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்;

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில அரசுப் பட்டியலில் வழங்க வேண்டும்; கால நிர்ணயம் செய்து மதுக்கடைகளை மூடவேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்புப் பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசைக் காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம்; பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 26 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது தவெக.

தவெக மாநாட்டுக்கு வந்தபோது உயிரிழந்த 6 பேருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்ததைத் தொடர்ந்து, அடுத்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்