சென்னை: சென்னையில் இயங்கும் புதிய தாழ்தளப் பேருந்துகளில் உடற்குறையுள்ளோர் சக்கர நாற்காலியுடன் பயணம் செய்ய உதவும் வகையில் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
இதையொட்டி, சக்கர நாற்காலிகளுடன் வரும் பயணிகளை அந்தப் பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதன் தொடர்பில் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
உடற்குறையுள்ளோர் சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமான சாய்தளத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஏறவும் இறங்கவும் உதவிசெய்ய வேண்டும்.
பயணம் செய்யும்போது அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளைப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடியுடன் இணைத்துப் பூட்ட நடத்துநர்கள் உதவ வேண்டும்.
இறங்கும்போதும் சாய்தளப் படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பேருந்திலிருந்து அவர்கள் பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும்.
இதில் எவ்விதப் புகாரும் வராத வகையில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் நடந்துகொள்ள வேண்டும் என்று கழகம் கூறியுள்ளது.
இந்தப் புதிய வசதியுன் கூடிய பேருந்து சேவை உடற்குறையுள்ளோரிடம் மட்டுமன்றி பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.