சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்றும் மாவட்டம்தோறும் நேரடியாகச் சென்று கட்சித்தலைவர் விஜய் சார்பில் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தவெக மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பொதுச்செயலாளர் ஆனந்த் தாம் ஒரே நாளில் அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், திருவாரூர், திருச்சி ஆகிய ஐந்து இடங்களுக்குச் சென்று அங்குள்ள தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக குறிப்பிட்டார்.
கட்சித் தலைவரின் களங்கப்படுத்தாத வகையில் எவ்வாறு ஒழுக்கத்துடன் மாநாட்டுக்கு வரவேண்டும் என்பது குறித்து தொண்டர்களுக்குத் தெரியும் என்றும் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 25 குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் ஆனந்த் தெரிவித்தார். நீண்ட தூரத்தில் இருந்து மாநாட்டுக்கு வருவோர் இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை என்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும் என்றும் ஆனந்த் மேலும் அறிவித்துள்ளார்.

