சென்னை: தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இம்முறை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது தமிழக அரசு.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், ஆளுநர் ரவி அரசியல் சாசனத்தை மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பல்கலைக் குழுவில் நிதித்துறை செயலரை நியமிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலை சட்ட திருத்த மசோதா - 2025, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, வழக்கமான நடைமுறையின்படி, அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழக ஆளுநருக்கு புதிய கோப்புகளை அனுப்பி வைத்தது என்றும் அந்த மசோதாவை அதிபரின் பார்வைக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தமிழக அரசு, ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஆளுநரின் இந்த முடிவு அரசியல் சாசனத்தின் 200வது பிரிவை மீறுவதாக உள்ளது.
எனவே, ஆளுநரின் இந்நடவடிக்கையை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.