மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக ஆதரவில் காங்கிரஸ் போட்டி

மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக ஆதரவில் காங்கிரஸ் போட்டி

2 mins read
dfe542ef-947e-4f6c-95a8-4bb2ca41f81e
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவில் மாநிலங்களவை இடைத் தேர்தலில் காங்கிரசின் பிரவின் சக்ரவர்த்தி, தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், சட்டப்பேரவை செயலர் சாந்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். - படம்: நக்கீரன்

சென்னை: நாடு முழுவதும் 24 மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர். பதவிக்கான தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர, 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியது காரணமாக, 3 இடங்களுக்கான இடைத் தேர்தலும் அதே நாளில் நடத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தான் ஏற்கெனவே வகித்து வந்த மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மே 7ம் தேதி விலகினார்.

இதனால், தமிழகத்தில் அந்த ஒரு இடத்துக்கான இடைத்தேர்தல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 3 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்ட தவெகவுக்கு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட வாய்ப்பு இருந்தது.

ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் இடத்தை ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்தார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலர் சாந்தியிடம் தனது வேட்புமனுவை பிரவீன் சக்ரவர்த்தி வெள்ளிக்கிழமை தாக்கல்செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, "முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை, கருணையால் எனக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக உரிமைகளைப் பாதுகாக்க எனது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். காங்கிரஸ், தவெக கூட்டணியின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லவும் பாடுபடுவேன்," என்றார்.

குறிப்புச் சொற்கள்
தவெககாங்கிரஸ்நாடாளுமன்ற உறுப்பினர்