சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 41 இடங்களை இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், திமுக 25 முதல் 27 இடங்களுக்குள் இந்தப் பேச்சுவார்த்தையை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் 25 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரே ஒரு மாநிலங்களவை இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரப்பட்ட நிலையில், அதற்கு ஒருபோதும் சாத்தியமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் திமுக தரப்புடன் (முதலமைச்சர் மற்றும் கனிமொழி எம்.பி.) நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் காங்கிரஸ் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், திமுக தரப்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளையே மீண்டும் ஒதுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் கூடுதலாக ஓரிரு இடங்கள் வரையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் காங்கிரசுக்கு திமுக கொடுக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திமுக, காங்கிரஸ் தலைவர்களின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என்று கூறப்பட்டாலும், தொகுதி எண்ணிக்கை குறித்து இன்னும் உறுதியான முடிவு அறிவிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரசுடனான இறுதி தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் அடுத்த சில நாள்களில் எட்டப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

