சென்னை: சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மதவாத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரசின் ஆதரவைக் கோரி தவெக தலைவர் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலமைப்பு கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான, மகத்தான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வழங்கியுள்ளனர்.
“அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்,” என்றார் திரு கிரிஷ் சோடங்கர்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு, பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்றும் தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் இது பொருந்தும் என்றும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக.வுக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் அடுத்த ஆதரவு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்
தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்த நிலையில், அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கட்சியின் மூத்த பிரமுகர்களில் பலர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனப் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆனால் அதிமுக தலைமை இதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். புதன்கிழமை (மே 7) காலை முதல் மாலை வரை மூன்று முறை இந்த ஆலோசனைகள் நடந்தன. ஒவ்வொரு முறையும் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் ஆலோசனை நீடித்தது.
சட்டமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாததால், திமுக, அதிமுக கூட்டணியில் சிறிய கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது தவெக. அதிமுக வசம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே அக்கட்சியின் ஆதரவு கிடைத்தால் போதும் என தவெக தலைமை கருதுவதாகத் தகவல்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோற்று வருகிறது. எனவே மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டிருப்பது புதிய விவாதங்களைக் கிளப்பி உள்ளது.

