சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மதவாத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரசின் ஆதரவைக் கோரி தவெக தலைவர் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான, மகத்தான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வழங்கியுள்ளனர்.
“அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்,” என்றார் திரு கிரிஷ் சோடங்கர்.
இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு, பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது என்றும் தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களுக்கும் இது பொருந்தும் என்றும் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுடன் திமுகவுடனான உறவு முடிந்துவிட்டது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
புதன்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நுழைந்துவிடக் கூடாது என்பதே காங்கிரசின் நிலைப்பாடு என்றார்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அரசியலமைப்பை அதன் உணர்வின்படி பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்துக்கே மக்கள் அதிகாரம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

