சிதம்பரம்: தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக எண்ணிகையிலான தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.
அழகிரியின் இந்தப் பேட்டி, திமுக கூட்டணி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இம்முறை தங்களுக்குக் கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றன.
மேலும், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு தரவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைமை இக்கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தங்களுடன் இணையும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என விஜய்யின் தவெக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தவெக அணிக்குத் தாவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக காங்கிரசுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்குகேட்கப்படும் என அவர் தேர்தல் நெருங்கும் வேளையில் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.