சென்னை: ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்துக்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டுச் சதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என்றும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் இக்கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலரது சதி குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி தன் சகோதரரைப் போன்றவர் என்றார் திரு ஸ்டாலின்.
திமுகவும் காங்கிரசும் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்பது அவர்களுக்கும் (காங்கிரஸ்) தெரியும், எங்களுக்கும் தெரியும் என்றார்.
மக்கள் முடிவு செய்வர்: காங்கிரஸ்
இந்நிலையில், தமிழகத்தில் அமையப்போவது கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2006ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி ஆட்சிக்காக அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் போனது காங்கிரஸ் தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணி ஆட்சி தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே புகைச்சல் நீடித்து வருவது மாணிக்கம் தாக்கூரின் பதிவின் மூலம் உறுதியாகி இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு
இதனிடையே, எதிர்வரும் 22ஆம் தேதி முதல் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 70 நாள்களுக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கக் காத்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில், திமுகவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், வெற்றிக்கனியைப் பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை திமுகவினர் அர்ப்பணிப்போடு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை தொடர்பாக இதுவரை 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள திமுக தலைமை, கட்சித் தலைவரால் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ஆம் தேதி முதல் இக்குழு தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பாக இரண்டு மாதங்களுக்கு முன்பே குழு அமைக்கப்பட்டுவிட்டது என்று அக்கட்சியின் மேலிடத் தலைவர்களில் ஒருவரான கிரிஷ் சோடங்கர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

