ஈரோடு: நடப்பு திமுக ஆட்சியில் திருக்கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 3,500 கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெறும் என்றார்
“மன்னர் ஆட்சி காலத்தைவிட திமுக ஆட்சியில் அதிகமான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆக்கபூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்படுகின்றன.
“இதுவரை 1,120 கோடி ரூபாய் அரசிடம் இருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது,” என்றார் அமைச்சர் சேகர்பாபு.
திருச்செந்தூர் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பெருந்திட்டத்தின்கீழ் ரூ. 414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அறுபடை வீடுகளில் ஒன்றான சாமிமலைக்கு 100 படிகள் இருப்பதால் படியேறும் பக்தர்கள் சிரமம் கருதி மின்தூக்கி அமைக்கவும் மருதலை கோவிலும் படிக்கட்டுகள் இருப்பதால் மின் தூக்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
“ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் தொடங்க உள்ளன. உலக அளவிலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.