‘டாஸ்மாக்’ நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கப் பரிசீலனை: அரசு எச்சரிக்கை

‘டாஸ்மாக்’ நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கப் பரிசீலனை: அரசு எச்சரிக்கை

கோப்புப் படம்: லைவ் லா

02 Nov 2026 - 6:57 pm

2 mins read

கோவை: ‘டாஸ்மாக்’ நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆறு மாதங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஐந்து முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு புட்டிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டாலும், அதற்கான தொகை அரசுக்கு வந்து சேரவில்லை என்று திரு விக்னேஷ் குற்றஞ்சாட்டினார்

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஊழலாகக் காலி மதுப்புட்டி விவகாரம் உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முறைகேடுகளைத் தடுக்க அடுத்த 20 நாள்களில் மாநிலத்தின் எந்தப் பகுதியில் வாங்கிய மதுப்புட்டிகளையும் எந்த இடத்திலும் திரும்ப ஒப்படைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்நடவடிக்கைக்காக 40,048 சிறப்பு இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மதுக்கடைகளை மூடிப் போராட்டத்தில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், இதுவரை 960 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவுகளைப் போன்ற அவசரச் சூழ்நிலை ஏற்பட்டால், டாஸ்மாக் நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும். இதற்கு முன்பு டாஸ்மாக் நிர்வாகம் தனியார்மயமாக்கப்படாது என்று நான் ஒருபோதும் கூறியதில்லை,” என்று தெரிவித்த அமைச்சர் விக்னேஷ், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்