சென்னை: மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற ஆபத்து தமிழக மக்களின் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது என்று திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய அமைச்சர் அமித்ஷா சட்ட ரீதியாக உறுதியளிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18% என்பதில் இருந்து எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிப்பாரா அமித்ஷா?
“அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு,” என தயாநிதி மாறன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை காரணமாக பாதிக்கப்படப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி மு.க.ஸ்டாலின் எதிர்ப்பைப் பதிவு செய்தபோது, அவர் வீண் பதற்றத்தை உருவாக்குவதாக பாஜக குற்றம்சாட்டியது என்றும் இப்போது அவர்களின் குட்டு மக்கள் முன் அம்பலமாகி கிடக்கிறது என்றும் தயாநிதி மாறன் மேலும் தெரிவித்துள்ளார்.